×

தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்போரூர்: தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது. இதையடுத்து, மூலவர் விமானம், விநாயகர், முருகன், சிவன், அனுமன் சன்னதிகள் அமைக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று, வண்ணம் பூசும் பணிகள் முடிவு பெற்றது.

கடந்த 21ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் பணிகள் தொடங்கின. 22ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை போன்றவையும், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, கன்யா பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜையும், 8 மணிக்கு தீபாரதனையும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கடம் புறப்பாடு மற்றும் புனிதநீர் ஊற்றி ஐயப்பன் சன்னதி, விமானத்திற்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, `சரணம் ஐயப்பா’ கோஷமிட்டு வழிபட்டனர். கும்பாபிஷேக விழா முடிவுற்றதும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ayyappan temple ,Thandalam village ,Tiruppurur ,Sami ,Tiruporur ,Kumbabhishekam ,Dandalam Village ,
× RELATED ஐயப்பன் கோயிலில் அன்னதானம்